சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் பென்சிலய்யா(54) என்பவர் கடந்த 14ஆம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது இளைய மகனான கிருஷ்ணபிரசாத்(24) என்பவர் கடந்த 13ஆம் தேதி தனது உறவினர் மகனோடு வடபழனியில் உள்ள தனியார் மாலுக்கு வந்தபோது அவரை சில மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டதாகவும், ரூபாய் 30 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தரவில்லை என்றால் தனது மகனைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் தனது மகனை மீட்டுத் தரும்படி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து வடபழனி காவல் உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது கிருஷ்ணாபிரசாத்தின் செல்போன் ஆன்-ல் இருப்பது தெரியவந்தது.
சிக்னலை ஆய்வு செய்த காவல்துறையினர், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் கிருஷ்ண பிரசாத் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து செகந்திராபாத் சென்ற காவல்துறையினர், சாலையில் நடந்து சென்ற கிருஷ்ணபிரசாத்தை பத்திரமாக மீட்டு சென்னை வடபழனி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிருஷ்ணபிரசாத்தை யாரும் கடத்த வில்லை எனவும், தன்னை கடத்தியதாக நாடகமாடி வீட்டிலிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டு கிருஷ்ணபிரசாத் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.
மேலும், போலீசாரின் விசாரணையில், பி.ஏ., பொருளாதாரம் படித்துள்ள கிருஷ்ண பிரசாத் குறும்படம் எடுப்பதாகக் கூறி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், பின் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் மீண்டும் குறும்படம் எடுப்பதற்குத் தேவையான பணம் கிடைக்காததால் கடத்தல் நாடகம் அரங்கேற்றி வீட்டிலிருந்தே தனக்குத் தேவையான பணத்தைப் பறிக்கத் திட்டமிட்டு கடத்தல் நாடகத்தில் ஈட்டுப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
அதன்படி, கடந்த 13ஆம் தேதி காலை வாடகை காரை எடுத்துக்கொண்டு தனது உறவினர் மகனுடன் வடபழனியில் உள்ள ஃபோரம் மால் சென்று, அங்குள்ள கார்-பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு உறவினர் மகனிடம், காரிலேயே தங்கி இருக்குமாறும் தான் சினிமா வாய்ப்புக்காக ஏ.வி.எம் ஸ்டுடியோ வரை சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.
ஏ.வி.எம் ஸ்டுடியோ செல்வதாகக் கூறிய கிருஷ்ணபிரசாத் செல்லும் வழியிலேயே உறவினர் மகனுக்கு கால் செய்து, "தன்னை நான்கு நபர்கள் காரில் வைத்து கடத்தி செல்வதாகவும் இந்த தகவலை வீட்டில் உடனடியாக சொல்லிவிடு" என கூறியும் போன் அழைப்பைத் துண்டித்துள்ளார்.
அதன் பின்னர் கோயம்பேட்டிலிருந்து பேருந்து மூலம் ஆந்திரா சென்று பின் அங்கிருந்து செகந்திராபாத் சென்று உள்ளார். அங்கு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிய கிருஷ்ணபிரசாத் தனது பெற்றோரின் மொபைலுக்கு கால் செய்து, "தன்னை மர்ம நபர்கள் சிலர் கடத்தி விட்டதாகவும் ரூபாய் 30 லட்சம் கொடுத்தால் மட்டுமே தன்னை உயிருடன் விடுவதாகவும்" கூறி அழுதுள்ளார்.
மேலும், ரூ.30 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் உங்கள் மகனின் உடல் உறுப்புகளை எடுத்து அவற்றை விற்று பணமாக்கிக்கொள்வோம் எனவும் கிருஷ்ணபிரசாத்தே தனது பெற்றோரின் வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோருக்குத் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் காவல் நிலையம் சென்றனர்.
இளைஞரின் எதிர்காலம் குறித்து நல்லெண்ண அடிப்படையில் காவல்துறையினர் கிருஷ்ணபிரசாத்தை எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: ’அப்பா மட்டும் போதும்...’ - சொல்லாமல் சொல்லும் ரஜினி மகள்?