சென்னை: தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபுக்கு அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் தமிழ்நாடு, கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி மற்றும் நெகிழி கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவதை தடுக்க, கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்பி வரும் போது, குறைந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அங்குள்ள இடைத்தரகர்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து இங்கு கொட்டிவிடுகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் பலர், அங்குள்ள கடைகளின் குப்பைகளிலிருந்து பழைய இரும்பை பிரித்து எடுத்து விட்டு, மீதமாகும் உபயோகமில்லா குப்பையினை தமிழ்நாடு எல்லைக்குள் சட்டவிரோதமாக கடத்துகின்றனர்.
இவற்றை தமிழ்நாட்டில் உள்ள சில இடைத்தரகர்களின் உதவியோடு, ஆள் நடமாட்டமில்லாத இடங்களில், கொட்டி செல்கின்றனர். இது சம்பந்தமாக தமிழ்நாடு கேரளா எல்லையோர மாவட்டத்திலுள்ள கன ரக உரிமையாளர் கூட்டமைப்பினரிடம் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் 2 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தனிப்படை அமைத்து இவ்வழக்குகளின் குற்றவாளிகளை கண்காணித்து, ஏழு கன ரக வாகனங்களை பறிமுதல் செய்து, ஒன்பது நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு, கேரள எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திற்குள் இது போன்று சட்ட விரோதமாக புளியரை சோதனை சாவடி வழியாக நுழைய முயற்சித்த, 45 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மேற்படி வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
தென்காசி காவல்துறையினரின் நடவடிக்கையினால், ஊத்துமலை காவல் நிலைய சரகத்தில் கடந்த 13ஆம் தேதியன்று பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயளில்லாத பழைய டயர்கள் அடங்கிய கழிவுகளை கேரளாவிலிருந்து கொண்டு வந்த, புளலூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த இடைதரகரான கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரை கைது செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து உயிர் மருத்துவ கழிவுகள், தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை தடுப்பதற்கு தென்மண்டலத்திற்கென ஒரு பிரத்யேக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் சம்மந்தப்பட்டுள்ள இடைத்தரகர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள்: 17 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு