சென்னை: தாம்பரம் சானிடோரியம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலையோரமாக பூக்கடை நடத்தி வருகிறார்.
பிப்.19ஆம் தேதி அன்று சேலையூர் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் மணிவண்ணன் என்பவர் வெங்கடேசனிடம் மாமூல் கேட்டுள்ளார். வெங்கடேசன் மாமூல் தர மறுத்ததால், உதவி ஆய்வாளர் கத்தியால் அவர் முகத்தில் வெட்டி பூக்கடைகளை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனால், படுகாயமடைந்த வெங்கடேசன் முகத்திற்கு, 30 தையல்கள் போடப்பட்டது. இதனையடுத்து, மாமுல் கேட்டு தன்னை கத்தியால் வெட்டிய பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலையூர் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்தும் சேலையூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், தாம்பரம் காவல் ஆணையர் ரவியிடம், காவல் துறை உரிய நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, நமது 'ஈடிவி பாரத் தமிழ்நாடு' ஊடகத்தில் செய்தி வெளியாகியது. இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் ரவி வியாபாரியிடம் மாமூல் கேட்டு தர மறுத்ததால் கத்தியால் அவரை வெட்டிய பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற ஒழுங்கீனச் செயலில் ஈடுபடும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:வீடியோ: ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் லெவலுக்கு ஆட்டோ ரேஸ்