சென்னை: உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் மக்கள் குதூகலத்தோடு புத்தாண்டை வரவேற்கத் தயராகி வருகின்றனர். இந்த நிலையில், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும், 160 ஊர்க்காவல் படையினர் கூடுதலாக பணியில் ஈடுபட உள்ளனர்.
விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும், வாகன சோதனை செய்யவும் சாலையில் 150 இடங்களில் தடுப்புகள் வைக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும் ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸ், ஆட்டோ பந்தயம் நடக்காமல் கண்காணிக்க 12 குழுக்கள் போடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஈ.சி.ஆரில் முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட இடங்களில் கடலில் குளிக்கவும், பட்டாசு வெடிக்கவும், கேளிக்கை விடுதிகளில் நீச்சல் குளத்தில் குளிக்கவும், போதை வஸ்துகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முக்கிய சந்திப்பு சாலைகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாடத் தயாராகும் சென்னைவாசிகளே.. காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!