சென்னையில் கடந்த ஏழு நாள்களாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், “கடந்த ஏழு நாள்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 36 ஆயிரத்து 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 33 ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், நோய்த் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி முகக்கவசம் மற்றும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது கடந்த ஏழு நாள்களில் மட்டும் 16 ஆயிரத்து 192 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முழு ஊரடங்கிலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். வீட்டிற்கே சென்று உணவு டெலிவரி செய்யும் நபர்கள் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடி உணவு டெலிவரிக்கான ஆர்டர் வந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்காகவே ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனவே, உணவு டெலிவரி செய்யும் நபர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிஐடி நகரிலுள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பாதுகாப்பினை நீட்டிப்பது தொடர்பாக அவர்கள் தரப்பிலிருந்து விண்ணப்பிக்காததால், கனிமொழி வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது. தற்போது அவர்களது வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட காவலர்கள் தேவை என்பதாலும், எம்.பி. கனிமொழிக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லாத காரணத்தாலும் போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதாக காவல் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.