சென்னை: வில்லிவாக்கம் பாரதி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். மாற்றுத்திறனாளியான இவருக்கு, லட்சுமி என்ற மனைவியும், ஓம் பிரகாஷ்(வயது 22) மற்றும் சந்தியா என இரு பிள்ளைகள் உள்ளனர். சிவக்குமார் அவரது மனைவியுடன் இணைந்து கோயில் திருவிழாக்களில் பூஜைக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றார்.
சிவக்குமாரின் மகன் ஓம்பிரகாஷ் பி.காம் பட்டதாரி ஆவார். இவர், குடும்ப சூழ்நிலையின் காரணமாக ஆங்காங்கே கிடைக்கும் வேலைகளைச் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் பிப்ரவரி 25-ஆம் தேதி ஓம்பிரகாஷ் திடீரென வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இதனால், ஓம் பிரகாஷை மாற்றுத்திறனாளியான சிவக்குமார், அவரது நண்பர்கள், உறவினர்கள் என பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் ஓம் பிரகாஷை தேடி வந்துள்ளனர்.
அப்போது, சிவகுமார் ஓம்பிரகாஷின் செல்போனை ஆராய்ந்து பார்த்துள்ளார். அதில், ஓம்பிரகாஷ் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், படித்த டிகிரியின் தொடர்பாக எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை எனவும் வேலை தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்தும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக வேலை கிடைக்காமல் பெற்றோருக்கு பாரமாக இருப்பதாகவும், இனி பாரமாக இருக்க விரும்பவில்லை அதனால் வீட்டை விட்டுச் செல்கிறேன் எனவும் யாரும் தன்னை தேட வேண்டாம் என ஓம்பிரகாஷ் வீடியோவில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, வீடியோ ஆதாரங்கள் கொடுத்துப் பல நாட்களாகியும், வில்லிவாக்கம் போலீசார் சி.எஸ்.ஆர் கூட தராமலும், தனது மகனை கண்டுபிடித்துத் தராமலும் கடந்த 1 மாதங்களாக அலைக்கழிப்பதாக மாற்றுத்திறனாளியான சிவக்குமார் மற்றும் அவரது மனைவி லட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சிவகுமார், தினமும் தனது மகன் ஓம் பிரகாஷ், அவரது நண்பர்களிடம் நீண்ட நேரமாக தொலைப்பேசியில் பேசி வந்ததாகவும், தனது மகன் சம்பாதிக்கும் பணத்தை அவரின் நண்பர்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வந்ததாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும், தங்களது மகனை ஓம் பிரகாஷின் நண்பர்கள் சிறைப்பிடித்து வைத்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார். இதனால், ஓம்பிரகாஷின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், ஓம்பிரகாஷ் திருநங்கையாக மாற உள்ளதால், அவர் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் மகன் திருநங்கையாக மாறினாலும் பரவாயில்லை, தனது மகனை கண்டுபிடித்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஓம்பிரகாஷின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "96 இடங்களில் காயம்; சாத்தான்குளத்தை விட கொடூரம்" கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடித்துக்கொலை!