சென்னை: கிழக்கு கடற்கரைசாலை பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை இல்லம் உள்ளது. அதற்கு வெளியில் 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. இதனை வைக்கக்கூடாது என கூறி பனையூர் ஊர் மக்கள், இஸ்லாமிய மக்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று கொடிக் கம்பத்தை அகற்ற காவல் துறையினர் கிரேன், ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்தனர். தகவலறிந்து பாஜகவினரும் அண்ணாமலை வீட்டின் அருகில் குவிந்தனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. இரு தரப்பும் தங்கள் பங்கிற்கு மாறி மாறி கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடி கம்பம் இருக்கக் கூடாது, உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்திய நிலையில், பாஜகவினர் கொடி கம்பத்தை எடுக்க விடாமல் தடுத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் கொடி கம்பத்தை அகற்ற முயன்ற போது கிரேன் வாகனத்தின் கண்ணாடியை பாஜகவினர் அடித்து உடைத்தனர். இதனால், பாஜக பிரமுகர் இருவரை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். மேலும், பனையூர் சாலை எதிரே மசூதி அருகே இஸ்லாமியர்கள் அமர்ந்து கொடி கம்பம் அகற்றும் வரை போக மாட்டோம் என கூறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கொடி கம்பங்கள் அனுமதியில்லாமல் உள்ளன. யாருக்கும் இடையூறு இல்லாமல் வைக்கபட்டுள்ள கம்பத்தை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறையினர் கூறுகின்றனர். அருகில் திமுக கொடி கம்பம் இருக்கிறது, அது அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
நெடுஞ்சாலை துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் யாரிடம் தொடர்பு கொண்டாலும் அழைப்பை ஏற்கவில்லை. ராஜ் பவன் அருகில் காங்கிரஸ் கொடி கம்பம் உள்ளது அதனை ஏன் அகற்றவில்லை" என்று கேள்வி எழுப்பினார். பின்னர் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நிகழ்விடத்திற்கு வந்த சில நிமிடங்களில் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். அப்போது பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் பாஜகவைச் சேர்ந்த சிலர் கிழே விழுந்து காயமடைந்தனர். இதனையடுத்து காவல் துறையினர் கொடி கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட முயன்ற போது கிரேன் வாகன கண்ணாடியை உடைத்த பாஜகவைச் சேர்ந்த கன்னியப்பன் (வயது 37), பாலகுமார் (வயது 35), ரமேஷ் சிவா (வயது 33), பாலவினோத் குமார் (வயது 34), உள்ளிட்ட 6 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், ஆபாசமாக பேசுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொதுச் சொத்தை சேதப்படுத்துவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் பாஜகவை சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி மட்டும் தலைமறைவாக இருந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கானாத்தூர் காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொடி கம்பத்தை அகற்ற இடையூறு செய்த பாஜகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் - ஏன் தெரியுமா?