சென்னை: சென்னையில் வாகன ஓட்டிகளுக்கான புதிய வேக வரம்பு அமலுக்கு வந்துள்ளதால், போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு 50 கிலோ மீட்டர் வேகமும், இலகுரக வாகனங்களுக்கு 60 கிலோ மீட்டர் வேகவரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஆட்டோகளுக்கு 40 கிலோ மீட்டர் வேகமும், குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேக வரம்பு விதிமுறைகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 1000 ரூபாயும், இலகு ரக வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் சார்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று முதல் வேக வரம்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், முதல் நாளில் விதிமுறைகளை மீறியதாக 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகளில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் இடமிருந்து இதுவரை மொத்தம் 2.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரேடார் கன், ஏ.என்.பி.ஆர் கேமரா மூலமாக வரம்பை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் கண்காணிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் சென்னைவாசிகள் போக்குவரத்து விதிகளை மீறாமல் கடைபிடிக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் குவியம் பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு:-
சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ரயில்களில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி 7 மாவட்ட துணை கண்காணிப்பாளர் உட்பட 1045 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குற்ற சம்பவங்களை கண்காணிக்க சென்னையில் 12 குற்றப் புலனாய்வுத்துறை குழுவினர், திருச்சியில் 10 குற்றப் புலனாய்வு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல ரயில்வே போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை டிநகர் ரங்கநாதன் தெருவில் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் புது துணிகளை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது.
இந்த பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற செயல்களை ஈடுபடும் நபர்களை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் வண்ணாரப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் துணிகள் பொருட்களை வாங்கக் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வழிகளை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.