சென்னை: மெரினா கடற்கரையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு தொடர் கதையாகி வருகின்றது. எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளிலும் பொதுமக்கள் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக அடையாறு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பூக்கடை, வண்ணாரப்பேட்டை மற்றும் மாதவரம் ஆகிய 5 காவல் பகுதிகளிலுள்ள 13 காவல் நிலையங்களில் 5 ஆண்டுகளில் கடலில் மூழ்கி காணாமல் போனதாக 506 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி கடற்கரை திறக்கப்பட்ட பிறகு 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிரிழப்புகளை தடுக்க மீட்பு குழு
இந்த உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிவுறுத்தலின்படி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையின் கீழ் “பல்வகை குழு அடங்கிய மூழ்குதல் தடுப்பு பிரிவு குழு’ மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் காவல்துறை, கடலோர காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை, நீச்சல் வீரர்கள், முதலுதவி குழுவினர் இடம்பெற்றுள்ளனர். மேலும் கடல் அலையில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க கட்டுமரம், உயிர்காக்கும் உடைகள், அதிவேக படகுகள், மிதவை படகுகள், கயிறுகள் போன்ற பல்வேறு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து 13 காவல் நிலையங்கள் உள்பட, அதிகளவில் மரணங்கள் நிகழும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், 14 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் மேற்கொள்வது, டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பது போன்ற பணிகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் விழிப்புணர்வு
கடல் அலைகளின் தன்மை, ஆபத்து நிறைந்த பகுதிகள் உள்ளிட்டவை குறித்து தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், கடல்சார் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் அறிந்து, அதன் மூலம் குறிப்பிட்ட கடற்கரைகளில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
யாரேனும் கடல் அலையில் சிக்கினால், உடனடியாக அலெர்ட் கொடுக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கோமரா, அலையில் சிக்கியவர்கள் மிதக்கும் திசையை தெளிவாக காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடங்கி வைத்த டிஜிபி
இந்த சிறப்பு பிரிவை தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, கடலோர பாதுகாப்பு குழும காவல்துறைத் தலைவர் சந்தீப் மிட்டல், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று (அக்டோபர் 20) தொடங்கி வைத்தனர். அப்போது அலையில் சிக்குபவர்களை மீட்பது பற்றியும், முதலுதவி அளிப்பது குறித்தும் மீட்புப் படையினர் நடித்துக் காட்டினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திர பாபு, “சென்னை மெரினா, ராயபுரம், அடையாறு ஆகிய கடற்கரையில் அலையில் சிக்கி ஆண்டுக்கு 100 பேர் இறந்து வருகின்றனர். முதற்கட்டமாக காவல் ஆணையர் தலைமையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை, மீனவர்கள் இணைந்து மெரினாவில் மீட்பு குழு தொடங்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் கடற்கரைக்குள் வரும் போது தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடலுக்குள் இறங்கக்கூடாது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனித உரிமை என்ற பெயரில் போலி அமைப்புகள் தொடங்கினால் நடவடிக்கை - சைலேந்திர பாபு