சென்னை: மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை என்கிற குட்டி (50). இவர் மயிலாப்பூரிலுள்ள தெற்கு மாட வீதியில் வெள்ளீஸ்வரர் கோயில் எதிரில் நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 23) வழக்கம்போல் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் காய்கறி வாங்குவதுபோல நடித்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குட்டியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் குட்டியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக ஏழுமலை வசிக்கும் பகுதியிலுள்ள உஷா, ராணி, லட்சுமி என்கிற பெண்களுடன் தகராறு ஏற்பட்டதால் அவர்களின் உறவினர்கள் ஏழுமலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் திருடிய நபர்