சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி படித்து வருகிறார். இவரை, 2017ஆம் ஆண்டு அவருடன் பயின்ற மாணவர்கள் கிங்சோ தேப்ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி தனது பேராசிரியரிடம் புகார் அளித்தார்; ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால், மனவேதனையில் இருந்த மாணவி மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதன் பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 8 பேர் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் 354, 354(b), 354(c) 506(1) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகார் கொடுத்து ஒன்பது மாதங்களாகியும் குற்றவாளிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பின்னர், செய்வதறியாத நிலையில் இருந்த மாணவி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக களத்தில் இறங்கிய மாதர் சங்கம், பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்து ஒன்பது மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததற்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாதர் சங்கமும், பாதிக்கப்பட்ட பெண்ணும் சேர்ந்து கடந்த 22ஆம் தேதி மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து புகாரும் அளித்தார்.
மேலும், சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவி சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து உடனடியாக மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறையினர், பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக மேற்குவங்கம் விரைந்த காவல் துறையினர், அங்கு தலைமறைவாக இருந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவரான கிங்சோ தேப்சர்மா என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, அங்கு டிரான்ஸிட் வாரண்டு பெற்று சென்னைக்கு அழைத்து வரும் முயற்சியில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியில் தனிப்படை காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பட்டியலின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பாலியல் வன்புணர்வு சட்டம் என மேலும் இரு பிரிவுகளை இந்த வழக்கில் காவல் துறையினர் சேர்த்துள்ளனர்.
இவ்வழக்கில் பாலியல் வன்கொடுமை நடந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில் இது வரை பாலியல் சீண்டல் என்ற பிரிவிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இதையும் படிங்க: கத்தியுடன் வழிப்பறி செய்த 4 இளைஞர்கள் கைது