சென்னை: ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்தவர் டீரஜ் (20). சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் பி.ஈ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சோழிங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த டீரஜ் நேற்று முந்தினம் (ஜூலை 22) வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றார்.
வழக்கம்போல் கல்லூரியில் மதிய உணவு (அசைவ உணவு) சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பிறகு சுமார் 2 மணியளவில் அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயக்க நிலைக்குச் சென்ற அவர், விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் இரவு ஐந்து, ஆறு முறை வாந்தி எடுத்ததாகவும் அப்போது உடம்பு முழுவதும் வேர்வை விட்டபடி மீண்டும் மயக்க நிலைக்குச் சென்றதாக உடனிருந்த சக நண்பர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அவர்கள், இருசக்கர வாகனத்தில் சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டீரஜை அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள் முதலுதவி அளித்தபடியே மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
ஆம்புலன்ஸ் வருகைக்காக காத்திருந்த நேரத்தில் டீரஜ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த செம்மஞ்சேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த கல்லூரி மாணவன் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் மாணவன் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்று உடற்கூராய்வுக்கு பின்னரே உண்மை தன்மை தெரியவரும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் காதலனுடன் பேசியதால் காதலியை கொன்ற காதலன் கைது...