சென்னை: தாம்பரம் அடுத்த சானடோரியம் அமரர் ஜீவா தெருவில் சுமார் நான்கு வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் உமர் பாரூக் (30). இவர் கிண்டியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த ஜன. 27ஆம் தேதியன்று உமர் பாரூக் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர், மாலை வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 42 இன்ச் எல்இடி டிவி, விலையுயர்ந்த மடிக்கணினி, சிலிண்டர், ஐயன் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே இச்சம்பவம் குறித்து குரோம்பேட்டை குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், நந்தா படத்தில் வரும் ‘லொடுக்கு பாண்டி' கருணாஸைப் போல தனி ஒருவராக வந்து ஒருமணி நேரமாக நோட்டமிட்டு, பிறகு ஆட்டோவை அழைத்து வந்து, பின்னர் கள்ளச்சாவி மூலமாக வீட்டை திறந்து, பொருள்களை திருடிச் சென்றுள்ளார்.
பட்ட பகலில் ஆட்டோ மூலமாக வீட்டையே காலி செய்து திருடிச் சென்ற சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க: கத்தி முனையில் கொள்ளையடித்த எட்டு முகமூடி கொள்ளையர்கள் கைது