சென்னை: சேத்துப்பட்டு மங்களபுரம் எட்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (52). இவர் வாடகை வீட்டில் தனது குடும்பத்தோடு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டை காலி செய்ய வீட்டின் உரிமையாளர் வரலட்சுமி கூறியுள்ளார்.
சகுந்தலாவுக்கு 6 மாதங்களாக வீடு கிடைக்கவில்லை. அவரின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் முடிந்தபின் வீட்டை காலி செய்வதாக வீட்டின் உரிமையாளரிடம் சகுந்தலா கூறியுள்ளார். அதற்கு வீட்டின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தொலைபேசி மூலமாக வீட்டின் உரிமையாளர், தனக்கு தெரிந்த காவல் ஆய்வாளர் ஒருவரை வரவழைத்துள்ளார். அங்கு வந்த காவல் ஆய்வாளர் 1 கோடி ரூபாய்க்கு வீட்டை தான் வாங்கி விட்டதாகவும், 3 நாட்களில் காலி செய்ய வேண்டும் எனவும் சகுந்தலாவை மிரட்டியுள்ளார். வயதானவர் என்று கூட பார்க்காமல் சகுந்தலாவின் கணவரை வாடா போடா என ஒருமையில் காவல் ஆய்வாளர் பேசியுள்ளார்.
தாங்கள் தொடர்ந்து வீடு பார்த்து கொண்டு இருப்பதாகவும், வீடு கிடைக்கவில்லை எனவும் சகுந்தலாவின் மகள் கூறினார். வீட்டை காலி செய்யவில்லை என்றால் தன்னுடைய வேலையை காட்டவேண்டியிருக்கும் என காவல் ஆய்வாளர் மிரட்டினார்.
தொடர்ந்து மிரட்டி பேசி வந்ததால் சகுந்தலா போலீசாரிடம் புகார் அளிப்பதாக கூறினார். அதற்கு தனது பெயர் அம்பேத்கர் எனவும் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாகவும், யாரிடமாவது பேசி தன்னை பணியிடை மாற்றம் செய்து காட்டுங்கள் எனவும் மிரட்டும் தொனியில் காவல் ஆய்வாளர் பேசினார்.
இது குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சகுந்தலா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் அம்பேத்கரை தொடர்பு கொண்டபோது, சேத்துப்பட்டில் 5 வீடுகள் உள்ள கட்டடத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வாங்கியுள்ளதாகவும், அந்த கட்டடத்தில் மற்றவர்கள் காலி செய்த நிலையில், சகுந்தலா மட்டும் காலி செய்யவில்லை என்றார். இதனால் நேரில் சென்று சகுந்தலாவிடம் பேசியதாக காவல் ஆய்வாளர் கூறினார்.
இதையும் படிங்க: பிராங்க் வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை