சென்னை: மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (20). இவர் பிளிப்கார்ட் (flipkart) நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முடி திருத்தம் செய்யப்படும் இயந்திரத்தை ஆழ்வார் திருநகர் ஆற்காடு ரோடு பகுதியில் அமைந்துள்ள பார்கவி என்பவரின் வீட்டில் டெலிவரி செய்ய சித்திக் சென்றுள்ளார்.
அப்போது பார்கவியிடம் பார்சலை கொடுத்துவிட்டு அதற்குண்டான 43 ஆயிரத்து 617 ரூபாயைக் கொடுக்குமாறு சித்திக் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு பொருளைச் சரிபார்த்து விட்டு பணத்தை கொண்டு வருவதாகக் கதவை மூடி சென்ற பார்கவி 15 நிமிடங்கள் கழித்து பொருள் உடைந்து இருப்பதாகக் கூறி பார்சலை திருப்பி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சித்திக், அலுவலகத்திற்கு வந்து அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது உடைந்த மூட்டு வலிக்கான மசாஜ் இயந்திரம் இருந்ததைக் கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர், உடனடியாக பார்கவியிடம் தொடர்பு கொண்டு இது குறித்துத் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பொருள்தான் பார்சலில் இருந்ததாகவும், பொய் கூறினால் போலீசாரிடம் புகார் கொடுத்து உன்னை உள்ளே தள்ளி விடுவேன் எனவும் சித்திக்கை மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: Kanyakumari: காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை; கன்னியாகுமரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இதனால் பயந்த சித்திக் காவல்துறையில் புகார் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், அந்தப் பொருளுக்கான பணத்தை சித்திக்கை நிறுவனம் கட்டச் சொன்னதால் வேறு வழியின்றி நேற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சித்திக் அளித்த அந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரு அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ஏற்கனவே பார்கவி இதே போல கடந்த மே மாதம் 43 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை ஆர்டர் செய்து, பின்னர் மாற்றி வேறு ஒரு பொருளை பார்சலில் வைத்துத் திருப்பி கொடுத்ததாகப் புகார் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்த நூதன திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் பார்கவியிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி: கைதான மாஜி தலைமை காவலர் பகீர் வாக்குமூலம்!