சென்னை: புதுச்சேரி சப்ரெய்ன் பகுதியில் பழைமை வாய்ந்த சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பேரில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், புதுச்சேரி சப்ரெய்ன் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சோதனையில் தொன்மை வாய்ந்த நடராஜர், வீணாதாரா சிவன் மற்றும் விஷ்ணு உலோக சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. சிலைகளுக்குண்டான ஆவணங்கள் உரிமையாளர் ஜேசாப் கொலம்பானியிடம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தமிழ்நாடு கோயில்களில் இருந்து 1980க்கு முன்பாக களவாடப்பட்ட சிலைகளாக இருக்கக்கூடும் என சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட சிலைகள் 600 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சோழர்கள் மற்றும் விஜய நகர பேரரசுக்கு இடைப்பட்ட ஆட்சி காலத்தை சேர்ந்தவை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சிலைகள் பிரான்ஸ் நாட்டிற்கு ஒரு முறை கடத்த முயற்சி நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் ஜோசப் கொலம்பானியிடம் கிடைத்தது எப்படி, எந்த கோயிலை சேர்ந்தது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Viral video : பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்ற ஆசிரியர் பணியிடை நீக்கம்