சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான சி.டி செல்வம், தற்போது தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள காவலர் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். மார்ச் 22ஆம் தேதி அசோக் நகரிலுள்ள காவலர் பயிற்சிக் கல்லூரிக்குத் தனது காரின் பாதுகாவலர் சக்திவேலுடன் சி.டி செல்வம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சி.டி செல்வத்தின் காரை வழிமறித்தனர். அதனால் அவரது பாதுகாவலர் சக்திவேல் காரைவிட்டு இறங்கி வந்து அந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையோரம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது கஞ்சா போதையில் சக்திவேல் உடன் தகராறில் ஈடுபட்ட அம்மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலின் தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி செல்வம் தொலைபேசி மூலம் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் தகவல் தெரிவித்தார்.
சிசிடிவி மூலம் விசாரணை : இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாவலரான சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் கே.கே நகர் காவல் துறையினர், தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்ணகி நகரை சேர்ந்த புருஷோத்தமன், நிஷாந்த், மனோஜ் ஆகிய மூவரும் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலரை வெட்டி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
கைது : அதனடிப்படையில் மார்ச் 23ஆம் தேதி கண்ணகி நகரைச் சேர்ந்த பழைய குற்றாவாளியான புருஷோத்தமனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். நேற்று (மார்ச் 24) திருப்பூர் சென்ற தனிப்படை காவல் துறையினர் அங்கு பதுங்கியிருந்த நிஷாந்த், மனோஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களை சென்னை அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட புருஷோத்தமன் காவல் நிலையத்திலுள்ள கழிவறையில் வழுக்கி விழுந்து இடது கை எலும்பு முறிந்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காய்கறி வியாபாரிக்கு கத்திக்குத்து - போலீஸ் விசாரணை