சென்னை: விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (19). இவர் ராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் (பிப்.8) கல்லூரி முடிந்த பின்பு ரிஸ்வான் தனது நண்பர்களுடன் 25ஜி பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கோடம்பாக்கம் ஹைரோட்டில் உள்ள பாம்கிரோவ் பேருந்து நிலையம் அருகே பேருந்து சென்ற போது, மாநில கல்லூரியை சேர்ந்த 25 மாணவர்கள் பேருந்தில் ஏறி கூச்சலிட்டு கொண்டே வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் பேருந்தில் பயணித்த நியூ கல்லூரி மாணவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த ஐடி கார்டை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு ரிஸ்வானை மட்டும் மிரட்டி பேருந்தை விட்டு கீழே இறக்கி கொண்டு, அவரை பல பேருந்துகளில் கடத்தி சென்று சுற்றவிட்டு போரூர் பகுதிக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு அவரை, மற்ற மாணவர்கள் மிரட்டி அடித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரிஸ்வான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின் சிசிடிவி காட்சிகளில் பதிவான முக அடையாளங்களை வைத்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நியூ கல்லூரி மாணவனை தாக்கிய 9 மாநில கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் வடபழனியை சேர்ந்த முகமது முஸ்தபா, அருண், கீர்த்தன், தனுஷ் உட்பட 9 பேர் என்பது தெரியவந்தது.
இவர்கள் மீது கடத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், கலகம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. நாசர் மகன் நீக்கத்திற்கு காரணம் இது தான்..