சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது.
அந்த உத்தரவை மீறி வாகனங்களில் வருபவர்களின் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் போரூர் மற்றும் பூவிருந்தவல்லி பகுதியில் மட்டும் சுமார் 2500க்கும் மேற்பட்ட இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
இதையடுத்து ஊரடங்கு நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் வாகனங்களை ஒப்படைக்கும் பணி இன்று தொடங்கியது. காலையில் வந்தால் அதிகம் பேர் வருவார்கள் என்பதால் மாலையில் வாங்கி கொள்ளலாம் என நினைத்து வாகனங்களை வாங்கி செல்ல ஒரே நேரத்தில் அதன் உரிமையாளர்கள் குவிந்தனர்.
அவர்களை போக்குவரத்து காவல் துறையினர் ஒழுங்குபடுத்தி ஒவ்வொருவரின் ஆவணங்களையும் சரிபார்த்த பின்பு வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.