சென்னை:சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.
ஆனால் சினேகன் பவுண்டேஷன் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக சினேகன் தெரிவித்ததை கண்டிக்கும் விதமாக பாடலாசிரியர் சினேகன் மீது மீண்டும் ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து சினேகன் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சென்னை போலீசாருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு முன் பாடலாசிரியர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சினேகம் அறக்கட்டளை பண மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என பாடலாசிரியர் சினேகன் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:பாடலாசிரியர் சினேகன் மீது பாஜகவைச் சேர்ந்த நடிகை காவல்துறையில் புகார்...!