சென்னை: தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளுக்கு 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கரோனா விதிமுறைகள் குறித்து திரையரங்க உரிமையாளர்களிடமும் மாநகராட்சி அலுவலர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியது. இதனால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் கரோனா விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இதில் ஈக்காட்டுதாங்கலில் இயங்கி வரக்கூடிய காசி திரையரங்கம் கரோனா விதிமுறைகளை மீறியதாகவும், 50 விழுக்காட்டிற்கும் அதிகமான ரசிகர்களை அனுமதித்ததும் தெரியவந்தது.
மேலும் திரையரங்கிற்கு வரக்கூடிய ரசிகர்களில் பலரும் முகக்கவசம் அணியாமல் படத்திற்கு சென்றுள்ளனர். இதனால் காசி திரையரங்கின் மீது எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் தொற்று நோய் பரவல் சட்டம் மற்றும் சட்டவிரோத கூடுதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.
இதேபோல் கரோனா விதிமுறைகளை மீறி மற்ற திரையரங்குகள் செயல்படுகிறதா என்பதை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.