சென்னை: கொடுங்கையூர் பகுதியில் கடந்த 3ஆம் தேதி காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, காரில் சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி விக்கிரமாதித்தன் என்பது தெரியவந்தது. மேலும் முன் விரோதம் காரணமாக ரவுடி பாம்சரவணனை கொல்ல சதி திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து காவல்துறை அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் காரில் மறைத்து வைத்திருந்த 34 நாட்டு வெடிகுண்டுகள், 30 அரிவாள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 34 நாட்டு வெடிகுண்டுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் புதைத்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 34 நாட்டு வெடிகுண்டுகளையும் செயலிழக்க செய்யுமாறு சென்னை பெரு நகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் லட்சுமி உத்தரவின் பேரில், காலி இடமான கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இன்று செயலிழக்க வைக்கும் பணி நடைபெற்றது.
குறிப்பாக எம்.கே.பி நகர் உதவி ஆணையர் தமிழ்வாணன் மற்றும் வெடிகுண்டு நிபுணரான ஜெயராமன் தலைமையில் 34 நாட்டு வெடிகுண்டுகளையும் வெடிக்க வைத்துச் செயலிழக்கச் செய்தனர். பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், ஆணி பால்ஸ், சல்பர் உள்ளிட்ட பொருட்கள் மூலம் நாட்டு வெடிகுண்டு தயார் செய்திருப்பதால், தவறுதலாக வெடிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் உடனடியாக செயலிழக்க வைத்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிரைம் சீரியல் பார்த்து கணவரை கொன்ற கொடூர மனைவி கைது