கரோனா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்ற உத்தரவும் அமலில் உள்ளது. ஆனால் உத்தரவை மீறி பொதுமக்கள் சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுகின்றனர்.
இதனால் உத்தரவை மீறி வெளியே சுற்றிய சுமார் 4 ஆயிரம் பேர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல் கடந்த இரண்டு நாட்களாக வெளியே சுற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளன.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அதிகளவில் தேவையில்லாமல் வாகனத்தில் செல்லும் நபர்களைக் கண்டறிய வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், வாகனத்தின் எண், பெயர் மற்றும் செல்வதற்கான காரணங்களைக் கேட்டு பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல் தேவையில்லாமல் அதிகளவில் வாகனங்களில் சுற்றும் நபர்களை இந்த பதிவு மூலம் கண்டறிந்து வாகனங்களைப் பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பாடி, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு எண்களைப் பதிவு செய்து வருகின்றனர்.