சென்னை மாவட்டம் தாம்பரம் - புழல் புறவழிச்சாலை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே அம்பத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் நேற்று (ஆக்.22) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நள்ளிரவு 2.30 மணி அளவில் அந்த வழியாக ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் மூவரும், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை கண்டதும் பைக்கை நடுரோட்டில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனைக் கண்ட காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றதில் ஒருவரை பிடித்துள்ளனர், மற்ற இருவரும் தப்பி ஓடியிருக்கின்றனர்.

பின்னர், பிடிபட்டவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகர் 3-வது தெருவை சேர்ந்த முகமது அப்பாஸ் (22), தப்பி ஓடியவர்கள் ரகுமான், மன்சூர் ஆகியோர் என தெரியவந்தது. மேலும் முகம்மது அப்பாஸ் கூறுகையில், சென்னை, பர்மா பஜாரில் முகமது அலி என்பவரது செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்ப்பதாகவும், உரிமையாளர் ஒரு லாரி சாவியை தன்னிடம் கொடுத்து அம்பத்தூர் சுங்கச்சாவடியில் நிற்கும் டேவிட்ராஜ் (45) என்பவரிடம் கொடுக்க சொன்னதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் முகம்மது அப்பாஸ் மூலமாக செல்போனில் பேசி டேவிட்ராஜாவை அங்கு வர வழைத்து சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டேவிட்ராஜ் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். டிரைவராக பணியாற்றி வருகிறார். மேலும், அவரை செங்குன்றத்தை சேர்ந்த சேது என்பவர் அனுப்பி வைத்தது தெரியவந்தது.
இந்நிலையில், சுங்கச்சாவடி அருகே சந்தேகமாக மினி லாரி ஒன்று ஆளில்லாமல் நின்று கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அப்பாஸ் வைத்திருந்த சாவியை வைத்து மினி லாரியை இயக்கியபோது அது இயங்கியதால், காவல்துறையினர் மினி லாரியில் ஏறி சோதனை செய்தனர். அதில் 5 பெரிய அளவிலான மரப் பெட்டியில் சுமார் மூன்றரை டன் எடையுள்ள 3 அடி நீளமுள்ள செம்மர கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, காவல்துறையினர் அங்கு பிடிப்பட்ட பைக் மற்றும் செம்மரக்கட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது அப்பாஸ், டேவிட்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு, அவர்கள் அளித்த வாக்குமூலததின்படி, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முகம்மது அலியையும், அவருக்கு உடந்தையாக இருந்த ரகுமான், மன்சூர் உள்ளிட்டோரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: லிட்டர் லிட்டராய் போலி மதுபானம், கள்ளச்சாரயம் தயாரித்து விற்றவர் கைது - ஆத்தூர் அருகே பரபரப்பு!