சென்னை: நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 1959-ஆம் ஆண்டு சீன படை தாக்குதலில் உயிர் நீத்த 10 ரிசர்வ் படை வீரர்களின் உயிர் தியாகத்தைப் போற்றும் வகையில் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் டிஜிபி அலுவலகத்தில் காவலர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தூண் முன்பு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உள்பட காவல் துறை அதிகாரிகள், முப்படைகளின் கிழக்கு பிராந்திய அதிகாரிகள், உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்தினர் என கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் 264 காவல் துறையினர் பணியின்போது உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர், சந்திரசேகர் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் தேவராஜன் என மூன்று பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்கள் தினந்தோறும் தங்களது பணிகளில் சவாலையும், ஆபத்துகளையும் சந்தித்து வருவதாகவும், சமூகத்தின் அமைதிக்காகக் காவலர்கள் தங்களது உயிரை விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது எனப் பேசினார்.
தீவிரவாதம் தெருவில் உள்ள சாதாரண மனிதனையும் அச்சுறுத்துகிறது எனப் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகக் கூடாது எனவும், அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டுமெனவும் பேசினார்.
வீரவணக்க நாளில் காவலர் சீருடையில் வந்து அசத்திய குட்டி போலீஸ்
காவலர் வீரவணக்க நாளில் பெரம்பூரை சேர்ந்த காவல் வார்டனாக பணியாற்றி வரும் அரவிந்த் என்பவருடைய 6 வயது மகன் தருணுக்கு ஐபிஎஸ் அதிகாரி போல் காவல் சீருடை அணிந்து மிடுக்காக அழைத்து வந்தது அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு மலர் வளையம் வைத்த, அதே இடத்தில் காவல் சீருடையில் மிடுக்காக நடந்து சென்ற தருண், அதே இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய தாணு, ஐபிஎஸ் அதிகாரி ஆகி திருடர்களைப் பிடிப்பேன் என மழலை மொழியில் கூறினான், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரிவித்தான். சிறுவனுடைய பேச்சு அங்கு வந்திருந்த அத்தனை காவல்துறை அதிகாரிகளின் கவனத்தைப் பெற்றது. சில அதிகாரிகள் சிறுவனைக் கைகுலுக்கிப் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காவலர் வீர வணக்க நாள்; 21 குண்டுகள் முழங்க அஞ்சலி...