சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (52). இவர் ரயில் பயணச்சீட்டு, விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொடுக்கும் தொழில் செய்துவந்துள்ளார். இந்நிலையில், நந்தனம் பகுதியில் அசூர்டு கேபிடல் சர்வீஸ் என்ற கம்பெனியை நடத்திவரும் சாகுல் அமீது, பால சந்தர், செல்வகுமார் ஆகியோர் பகிர்வு வர்த்தகம் (ஷேர்ஸ் டிரேடிங்) தொழில் செய்துவருகின்றனர். இதில் பணத்தை செலுத்தினால் 134 நாட்களில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.
இதனை நம்பி கந்தன் உட்பட 34 பேர் மூன்று கோடியே 60 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். இதைப் பெற்று கொண்ட, மூன்று பேர் திருப்பி அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் கந்தன் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் அளித்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதில் குற்றவாளியான சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலசந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் பல கோடி ரூபாய் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாலசந்தர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.