சென்னை: தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் காணாமல் போயுள்ளன. இதில் ஒன்று, கேராளாவில் இருந்து இந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த ஆமெக் என்பவருடையது. மற்றொரு இருசக்கர வாகனம், அதே மருத்துவமனையில் படித்து வரும் படப்பையைச் சேர்ந்த நவீன் என்பவருடையது. நவீனுடைய இருசக்கர வாகனம் மிகவும் விலை உயர்ந்தது எனத் தெரிகிறது.
இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது குறித்து ஆமெக், நவீன் இருவரும் குரோம்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு(ஏப்.23) குரோம்பேட்டை போலீசார் ஜிஎஸ்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தால், இருசக்கர வாகனங்களின் எண்ணை சோதனை செய்தனர். அதில், இரண்டு வாகனங்களும் ஆமெக் மற்றும் நவீனுடையது என தெரியவந்தது.
பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (17), உன்னி ஸ்ரீ (17), சஞ்சய் (17) என்பதும், இவர்கள் ஏற்கனவே செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் எட்டு கிராம் தங்க நகையைப் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Hogenakkal: ஒகேனக்கல்லில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் கைது!