சென்னை துறைமுக அலுவலர்கள் எனக்கூறி துறைமுகத்தின் முதலீடு 100 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளர் உள்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது அரசு நிறுவனமான துறைமுக பொறுப்பு கழகம். கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் பணம் கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் நிலையான வைப்பு நிதியாக (Fixed Deposit) முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், முதலீடு செய்த மூன்று நாட்களுக்கு பிறகு கணேஷ் நடராஜன் என்பவர் தன்னை சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநர் எனக் கூறி பல்வேறு ஆவணங்களை எடுத்து வந்துள்ளார். நிரந்தர வைப்பு நிதிக் கணக்கில் உள்ள துறைமுகத்தின் 100 கோடி ரூபாய் பணத்தை, இரண்டு நடப்பு கணக்கை தொடங்கி அதில் தலா 50 கோடி ரூபாயை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து வந்த அந்த நபர் இதனை அடுத்து இரண்டு புதிய நடப்பு கணக்கில் தொகையை மாற்றுவதற்கான சென்னை துறைமுகத்தின் பரிந்துரை கடிதம், அனுமதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து கணக்குகளை உருவாக்கியுள்ளார்.
இதற்கு கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதிராஜா என்பவரும் உடந்தையாக இருந்திருக்கிறார். கணேஷ் நடராஜன், மணிமொழி என்ற நபரும் சேர்ந்து முதல்கட்டமாக நடப்பு கணக்கிற்கு மாற்றப்பட்ட ஒரு பங்கு 50 கோடியில் 45 கோடி ரூபாய் பணத்தை பல்வேறு வங்கிக் கணக்கில் தொடர்ந்து மாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் வங்கியில் இருந்த பிற ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, மற்றொரு நடப்பு கணக்கில் இருந்த 50 கோடியை மாற்றுவதற்கு இருவர் வந்தபோது வங்கி அலுவலர்கள் உதவியுடன், கோயம்பேடு காவல்துறையினர் கையும் களவுமாக மணிமொழி, செல்வகுமார் என்பவரையும் பிடித்து விசாரணை செய்ததில் இந்த மோசடி அம்பலமானது.
இதையடுத்து, கோடிக்கணக்கான ரூபாய் தொடர்பு இருப்பதும் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் இவ்வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு புகாரும் அளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் துறைமுக அலுவலராக ஆள்மாறாட்டம் செய்த கணேஷ் நடராஜன், மணிமொழி இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதிராஜா, அடையாளம் காணப்படாத பொதுத் துறை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் 45 கோடி ரூபாய் அளவிற்கு இவர்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை முடக்கி சென்னை துறைமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய வங்கி அலுவலர்கள், துறைமுக அலுவலர்கள், வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.