சென்னை: தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், ஆர்.எம்.கே நகர், அண்ணா தெருவில் வசித்து வருபவர் உஷா (48). இவர் தாம்பரம் மெப்சில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவர், இன்று (ஆக.30) வழக்கம் போல் வேலைக்குச் செல்வதற்காக அண்ணா தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கேடிஎம் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள், உஷா அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர்.
அப்போது சுதாரித்து கொண்ட உஷா, தாலிச் சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் இளைஞர்களால் செயினைப் பறிக்க முடியவில்லை. உடனே அங்கிருந்து தப்ப முயன்ற இரண்டு இளைஞர்களில் ஒருவரின் சட்டையை பிடித்தபோது அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது உஷாவுக்கு கழுத்தில் சிறு காயம் ஏற்பட்டது. உடனே, இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றொரு நபரை பிடிக்க முயற்சித்த போது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
செயின் பறிப்பு சம்பவம் குறித்து உடனடியாக பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருடன் வந்த மற்றொரு நபரின் செல்போன் நம்பரை வைத்து சோதனை செய்ததில் அவர் பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே இருப்பது தெரியவந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: Bus theft: அசந்த நேரத்தில் பணத்தை திருடும் கில்லாடி லேடிஸ்... கையும் களவுமாக சிக்கியது எப்படி?
இருவரிடம் விசாரனை செய்ததில், அவர்கள் புது பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (25) மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரிஷி (18) என்பது தெரியவந்தது. மேலும் செயின் பறிக்க முயற்சி செய்வதற்காக பயன்படுத்திய கேடிஎம் இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில் பல்லு பாஸ்கர் மீது சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம், சங்கர் நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பீர்க்கங்கரணை ஆகிய பகுதிகளில் கடந்த எட்டு வருடங்களாக செயின் பறிப்பு, வழிப்பறி, செல்போன் பறிப்பு என பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர்கள் மீதும் பீர்க்கங்கரனை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் அமேசான் மேலாளர் சுட்டுக்கொலை!