சென்னை: அமைந்தகரை கண்ணப்பன் தெருவில் விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான சி.வி. எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் இயங்கிவருகிறது. ஜூன் 28ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் விக்னேஷ், நிதி நிறுவனம் நடத்திவரும் குமார் (எ) மணிகண்டன், அவரது நண்பர்கள் ராம்குமார், அப்பு, பாலா, மோகன் ஆகிய ஆறு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் குமாரை கத்தியால் தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த சுமார் 20 சவரன் நகைகள், சூதாட வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து வெட்டுக் காயங்களுடன் கிடந்த குமார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
காவல் துறை விசாரணை
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அமைந்தகரை காவல் துறையினர், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்து, விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட அனைவரிமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ராம்குமார் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், ராம்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முன்னதாக தனது குடும்பத்தாரின் நகைகளை அடைமானம் வைத்து, குமாரிடம் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராம்குமார், சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார்.
இதனால், தனது நண்பர்களைத் தூண்டிவிட்டு, கொள்ளையர்கள்போல் சம்பவ இடத்திற்கு வரவழைத்து குமாரிடமிருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
கொள்ளையர்கள் கைது
இதனையடுத்து ராம்குமாரை கைதுசெய்த காவல் துறையினர், அவர் மூலம் அவரது நண்பர்களான பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது சாதிக் (24), நாகூர் மீரான் (30), சதீஷ் (21), ஜானகிராமன் (23), ஹரிஷ் (20) ஆகிய ஆறு பேரையும் கைதுசெய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாகவுள்ள மோகன், சரத் குமார், ஆப்ரகாம் ஆகிய மூவரையும் காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 15 சவரன் நகைகள், எட்டாயிரம் ரூபாய், மூன்று கத்திகள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
இதையும் படிங்க: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: கொள்ளையரை 7 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு