தேனி: 'ஒரு ஊருக்கு கோயில் எவ்வளவு அவசியமோ அதேபோல, பள்ளியும் மிக மிக அவசியம்' என தேனியில் நடைபெற்ற அரசுப் பள்ளி நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சசிகுமார் பேசினார்.
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் செயல்படும் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய நபர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி 'பொதுப்பள்ளி பாதுகாப்பு இயக்கம்' சார்பில் நேற்று (ஜனவரி 16) வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு, அரசு பள்ளிக்கு நன்கொடை வழங்கிய பள்ளியின் முன்னாள் மாணவர்கள், அப்பகுதி பொதுமக்கள் என சுமார் 80க்கும் மேற்பட்டோருக்கு விருதை வழங்கி கௌரவித்தார்.
அதேபோல் 'முதுமை கல்வி' என்ற அடிப்படையில் ஊரில் உள்ள வயதான முதியவர்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக இங்கு கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கும் நடிகர் சசிகுமார் விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசும்போது, "அரசுப் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைவரும் திறமையானவர்களை உருவாக்க, தங்களது உழைப்பைத் தருகின்றனர். இது உங்கள் ஊர், உங்கள் பள்ளி. எனவே அதனை கைவிட்டுவிடக்கூடாது.
அரசுப் பள்ளிக்கு உதவி செய்த அனைவருக்கும் விருது வழங்குவது நான் அவர்களுக்கு செய்யும் நன்றி. அரசுப் பள்ளியை நடத்துவதற்கு அரசை மட்டும் நம்பாமல் பொதுமக்களும் நிதி வழங்கி உதவ வேண்டும். ஒரு ஊருக்குக் கோயில் எவ்வளவு அவசியமோ, அதுபோல பள்ளியும் மிக மிக அவசியம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நலம்...முதுகெலும்பில் குத்தியிருந்த கத்தி அகற்றம்!
முன்னதாக, நடிகர் சசிகுமாரை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நிகழ்ச்சி நடைபெறற இடத்தில் திரண்டு, அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முண்டி அடித்தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.