ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஏரியில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். மேலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பிறகு, தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டனர். இதன்பின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், இறந்த நபருக்கு சுமார் 35 வயது இருக்கும் என தெரிவித்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
பின்னர், உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த நபர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எனினும் உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகு தான் இது கொலையா தற்கொலையா என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் கூறினர்.