சென்னை: பாரா ஒலிம்பிக் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட்24 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள், ஒன்பது விதமான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று பதங்கப்பட்டியலில் 24ஆவது இடத்தைப் பிடித்தது. உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2ஆவது முறையாக பதக்கம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார். கடந்தமுறை, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை காவல் துறையினர் சார்பில் மாரியப்பனை கௌரவிக்கும் விதமாக, சென்னை, பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
சிவப்பு கம்பள வரவேற்பு
இதில் கலந்து கொண்ட மாரியப்பனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மத்திய தொழிற் பாதுகாப்பு படை அலுவலகத்தில் மாரியப்பன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மாரியப்பன் பேச்சு
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மாரியப்பன், "அனைவரும் விளையாட்டு வீரர்களை ஹீரோவாக எண்ணுகின்றனர் ஆனால் உண்மையான ஹீரோக்கள் காவல் துறையினர்தான். குடும்பங்களை மறந்து மக்களைக் காத்து வருகின்றனர்.
கஷ்டங்கள் வரும்போது சோர்வடைந்து போகாமல் தொடர்ந்து முயற்சிகள் செய்து நம்பிக்கையுடன் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுலாம்" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி ஸ்ரீராம் கலந்துகொண்டு மாரியப்பனை வாழ்த்தினார்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமத்தை 13ஆம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார்- அமைச்சர் மா. சுப்பிரமணியன்