இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 பணிகளுக்கான போட்டித்தேர்வின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சாதகமா... பாதகமா? என்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அது குறித்த உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க நினைக்கிறேன்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் துணை வணிகவரி அலுவலர், இரண்டாம் நிலை சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 18 வகையான பணிகளுக்கு நேர்காணலுடன் கூடிய போட்டித் தேர்வு மூலமாகவும், உதவியாளர், தனி எழுத்தர் உள்ளிட்ட 20 வகையான பணிகளுக்கு நேர்காணல் இல்லாத போட்டித் தேர்வு மூலமாகவும் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதுவரை இந்த இரு போட்டித் தேர்வுகளும் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி இவை ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இதனால் மாணவர்கள் தேவையின்றி கூடுதலாக ஒரு போட்டித்தேர்வை எழுதுவது தவிர்க்கப்படும்.
முதனிலைத் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய தாள்களில் இடம்பெறக்கூடிய பகுதிகள் முதன்மைத் தேர்வுகளில் கூடுதல் முக்கியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, முதனிலைத் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய இரு தாள்களும் இருந்தாலும் கூட, தமிழ் படிக்காத அல்லது தமிழ் தெரியாத ஒருவர், ஒட்டுமொத்த தமிழ்ப் பாட பகுதிகளையும் புறக்கணித்து விட்டு, ஆங்கிலப் பாடப் பகுதிகளுக்கான வினாக்களுக்கு மட்டும் விடையளித்து தேர்ச்சி பெற்று விட முடியும்.
ஆனால், இப்போது முதன்மைத் தேர்வில் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் ஆகிய இரு பாடப்பகுதிகளும் கட்டாயமாக்கப் பட்டிருப்பதால் தமிழ் தெரியாதவர்கள் ஆங்கிலம் தொடர்பான வினாக்களை மட்டுமே எழுதி தேர்ச்சி பெற முடியாது. அதுமட்டுமின்றி, முதன்மைத் தேர்வு வினாத்தாள் பகுதி அ, பகுதி ஆ என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே 100, 200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அ பகுதியில் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கான இரு வினாக்களுக்கு 50 மதிப்பெண்கள், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதற்கான இரு வினாக்களுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த 100 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மட்டும் தான் ஆ பகுதி விடைகள் திருத்தப்படும். தமிழ் தெரியாமல் அ பகுதியில் 25 மதிப்பெண்கள் எடுக்கவே முடியாது. அந்த வகையில் தமிழ் தெரியாதவர்கள் அரசு பணிகளில் நுழைவதை இந்த முறை தடுக்கும்.
அதுமட்டுமின்றி திருக்குறள், சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கூடுதல் வினாக்கள் எழுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழை ஒரு பாடமாக படிப்பவர்களும், தமிழ் இலக்கியம் படிப்பவர்களும் நமது மொழியை ஆழமாக படிக்கவும் இந்த புதிய தேர்வு முறை வகை செய்யும். அண்மைக்காலமாக, தமிழக அரசுப் பணிகளில் தமிழ் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வது அதிகரித்து வருகிறது. அதற்கு தமிழ் தெரியாதவர்கள் கூட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது தான் காரணம் ஆகும். அந்த நிலையை மாற்ற தற்போது செய்யப்பட்டிருப்பது போன்ற பாடத்திட்ட மாற்றம் அவசியம். அந்த வகையில் தேர்வாணையத்தின் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தமிழர் கோயிலில் சிங்களவர்கள் தாக்குதல்: தமிழீழமே தீர்வு' - வலியுறுத்திய ராமதாஸ்!