ரயில்வே துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டி.ஜே. நரேன் நேற்று (அக்டோபர் 11) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாக மணிக்கு 130 கிமீ வேகமாக செல்லும் ரயில்களில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளையும் ஏசி வசதியுடைய ரயில் பெட்டிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள், 3 AC டிக்கெட்டுகளின் விலையை விட குறைவாக இருக்கும்" என்றார்.
இந்தியாவில் நெடுந்தூரப் பயணங்களுக்கு சாமானியர்களின் முக்கிய தேர்வாக ரயில்கள்தான் இருக்கும். இதனால் அனைத்து ரயில் பெட்டிகளையும் குளிர்சாதன வசதியுடையவையாக மாற்றும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மணிக்கு 130 கி.மீக்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் தொடர்வண்டிகளில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என தொடர்வண்டித்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இது தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்! அனைத்துத் தொடர்வண்டிகளிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% பெட்டிகள் சாதாரண வகுப்பு பெட்டிகள் இடம் பெற வேண்டும். அதேபோல் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். தொடர்வண்டித்துறை ஏழைகளின் தோழனாக தொடர வேண்டும்!@PiyushGoyalOffc @RailwaySeva" என்று பதிவிட்டுள்ளார்.