சென்னை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கோவை மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி தற்போது மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையையும் கவனித்து வருகிறார். இவர் கோவையில் நேற்று (ஜூலை 17) பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முன்னதாக டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறக்க வேண்டும் என கோரிக்கை வருவதாகவும், டெட்ரா பேக்குகளில் 90 மி.லி. மதுபானம் அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக இவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சையாகி இருந்தது இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறப்போம் என ஒரு இடத்தில் கூட நாங்கள் எதுவும் சொல்லவில்லை. கடினமான வேலை செய்யக் கூடியவர்கள் காலையில் மது குடிக்க வேண்டியுள்ளது என கோரிக்கை விடுத்தனர். காலையில் குடிப்பவர்களை குடிகாரன் என யாராவது சொன்னால், அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
மாலையில், அது வேறு விஷயம். காலையில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் தவிர்க்க முடியாத சூழலில் அதை குடிக்கிறார்கள். அவர்கள் செய்கின்ற வேலை எல்லாம் வேண்டும். வீட்டை விட்டு வெளியில் வருகின்றோம். சாக்கடை அடைத்து இருந்தால் மூக்கை பிடித்துக் கொண்டு உள்ளே போய் விடுகிறோம். அதை சுத்தம் செய்வதற்கு யார் வருகிறார்கள்? அப்படிப்பட்டவர்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? மாற்று வழி என்ன என்பதை கண்டுபிடிக்கலாம். மது குடிப்பவர்களை படிப்படியாக நமது பக்கம் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.
அமைச்சர் முத்துசாமி பேசியது சர்ச்சையான நிலையில், பாமக தலைவர் அன்புமணி, அமைச்சர் முத்துசாமி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காலையில் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு செல்பவர்கள் நாற்றத்தை சகித்துக் கொள்ள தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது, அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார்.
இதையெல்லாம் எந்த வகை தத்துவத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை. சாக்கடைகளை தூய்மைப்படுத்தும்போது நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். அதற்கான தீர்வு சாக்கடைகளை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை எந்திரமயமாக்கி, அதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அடுத்தடுத்த நிலையில் உள்ள பணிகளுக்கு உயர்த்துவதுதான் சமூக நீதி.
மாறாக, சாக்கடை தூய்மை செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு காலையிலேயே மது கொடுக்க வேண்டும் என்று துடிப்பது மது நீதி. அது மிகவும் ஆபத்தானது. நாற்றத்தை மறக்க மது தான் தீர்வு என்றால், அதை விட கொடிய நாற்றத்துடன் மதுவை அருந்தி விட்டு வீட்டுக்கு வரும் கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் மனைவிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அமைச்சர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்?” என பதிவிட்டுள்ளார்.