வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாமக கட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாமக தொண்டர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கிச் செல்லும் பாமக கட்சியைச் சேர்ந்தவர்களை பெருங்களத்தூரில் சேலையூர் சரக உதவி ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல் இதனால் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பாமகவினர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தாங்கள் வந்த பேருந்து மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஜிஎஸ்டி சாலையில் இரு புறங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.குறிப்பாக சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களுக்குச் செல்லக்கூடியவர்கள் இந்த ஜிஎஸ்டி சாலை வலியாகத்தான் செல்வார்கள். தற்போது பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காலை நேரத்தில் வேலைக்குச் செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அதுமட்டுமில்லாமல் உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்குச் செல்பவர்கள் 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கும் வழியில்லாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு, ரயில் மீது கற்களை வீசியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பாமகவினரை காவல் துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர்.
தடையை மீறி போராட்டம் நடத்துவதால் கானாத்தூர், தாம்பரம், செங்குன்றம் பகுதிகளில் வாகனச்சோதனை சாவடி அமைத்து பாமகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பிவருகின்றனர். இதனால் சென்னையிலும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.