சென்னை சேத்துப்பட்டில் உள்ள பசுமை பூங்கா வளாகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் நவீன மீன் விற்பனை நிலையத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (அக்.22) தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே சென்னையில் மீன்வளத்துறைக்கு சொந்தமான சேத்துப்பட்டு பகமைப் பூங்கா வளாகத்தில் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரமான கடல் மற்றும் உள்நாட்டு மீன்கள் சுகாதாரமான முறையில் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம், கரோனா ஊரடங்கு காலத்தில் www.meengal.com என்ற இணையதளம் மூலமாகவும் " Meengal " என்ற செயலி மூலமாகவும் மீன் விற்பனை மேற்கொண்டது. இதில் சுமார் ரூ. 100 லட்சம் மதிப்பிலான 20 மெட்ரிக் டன் மீன்களை விற்பனை செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது, "20 டன் மீன்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உள்நாட்டு மற்றும் கடல் வாழ் மீன் வளர்ப்பில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக உள்ளது. இருந்தாலும் கருத்து கொள்கை என்பது மாறுபடும். இதற்காக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது என்று எடுத்துக்கொள்ள கூடாது. பிகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தால் அனைவருக்கும் பாரபட்சமின்றி அரசு வழங்கும்" என்றார்.
இதையும் படிங்க: வெங்காயம் விற்க கிரண் பேடி தடுக்கிறார் - அமைச்சர் குற்றச்சாட்டு