சென்னை: வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு சூறைக்காற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வீசிய சூறைக்காற்று, மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்து விட்டன. கரோனா தொற்றால் சந்தைகள் முடங்கியதால் வாழைத்தார் வணிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சூறைக்காற்றில் வாழைகள் சாய்ந்து உழவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகவிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்யும் அதனால் கோடை வெப்பத்தின் கடுமை தணியும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மே 19, 20 ஆகிய தேதிகளில் கடுமையான சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதனால், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் முழுவதுமாக சாய்ந்து விட்டன. இவை தவிர, சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை பருவ நெற்பயிரும் சேதமடைந்துள்ளன.
பட்ட காலிலேயே படும்.... கெட்ட குடியே கெடும் என்பது உழவர்களுக்குத் தான் பொருந்தும் போலும். வாழைப்பயிர் ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிக அளவில் அறுவடை செய்யப்படும். தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்த ஆண்டு வாழைப்பயிர் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தாலும் கூட, கரோனா காரணமாக வாழையின் தேவையும், வணிக வாய்ப்புகளும் குறைந்ததால் அவற்றை வாங்குவதற்கு வணிகர்கள் யாரும் முன் வரவில்லை.
வாழையைப் பொறுத்தவரை உணவுக்காக கொள்முதல் செய்யப்படும் வாழை வகைகளை விட, திருவிழாக்கள், வீட்டு விஷேசங்களுக்காக கொள்முதல் செய்யப்படும் வாழைகள் தான் அதிகம். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக திருமணங்கள், காதணி விழாக்கள் உள்ளிட்ட விஷேசங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும், கோயில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டிருப்பதாலும் வாழைத்தார்கள் போதிய அளவில் விற்பனை செய்யப்படவில்லை. பெரும்பான்மையான சந்தைகள் மூடப்பட்டு இருப்பதாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் உணவுக்கான வாழைத்தார்களுக்கும் தேவை குறைந்துவிட்டது.
அதனால், வழக்கமாக ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகக் கூடிய ஒரு வாழைத்தார் கடந்த இரு மாதங்களாக ரூ.75 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. ஒரு வாழை மரத்தை நட்டு, வளர்க்க ரூ.125 வரை செலவாகும் நிலையில், இந்த விலைக்கு வாழை விற்பனையானதால் உழவர்களுக்கு இழப்பே ஏற்பட்டது. ஆனால், சூறைக்காற்றில் பெரும்பான்மையான வாழைகள் சாய்ந்து விட்டதால் கிடைத்து வந்த சொற்ப வருமானமும் பறிபோய் விட்டது. வாழையை பொறுத்தவரை ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக உழவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கடந்த ஆண்டும் கரோனா தொற்று காலத்தில் இதே போன்ற இழப்பை கடலூர், காவிரி பாசன மாவட்ட உழவர்கள் எதிர்கொண்டனர். கரோனா தொற்று காலம் ஓய்ந்த பிறகு பருவ மழையாலும், பருவம் தவறிய மழையாலும் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்த இழப்பின் வலியும், வேதனையும் இன்னும் தீராத நிலையில் கடன் வாங்கி சாகுபடி செய்த வாழைப்பயிர்கள், சூறைக்காற்றுக்கு இரையாகி உழவர்களுக்கு துயரத்தைக் கொடுத்துள்ளது. அந்தத் துயரத்தை தமிழ்நாடு அரசு தான் துடைக்க வேண்டும்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், காவிரி பாசன மாவட்டங்களில் வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு சூறைக்காற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அதனடிப்படையில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் இழப்பீடு வழங்கி, உழவர்களின் துயரத்தை துடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள்க'- ராமதாஸ்