சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸை பாமகவின் தலைவர் பதவிக்கு ஜி.கே.மணி தான் பரிந்துரைத்துள்ளார் என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அரசியல் தீர்மானத்தில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 01.01.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே. மணி, கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான காலகட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்துச் செல்லும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே.மணி கட்சியின் நிறுவனரிடமும் நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாமக தலைவராக அன்புமணி தேர்வு