சென்னையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே17 இயக்கம் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட அனைத்து கட்சி தலைவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சம்மன் அனுப்பி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைரான வேல்முருகனுக்கும் சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று (பிப்.13) அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதுள்ள அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை அமைப்பது குறித்த போராட்டம் நடத்திய வழக்கையும் சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
70 நபர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு முக்கியத்துவமாக கருதி சிபிசிஐடியை விசாரிக்க வைப்பது கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு மக்களின் உரிமைக்காக போராடுகிற எங்கள் மீது காவல்துறையினர் போட்ட வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மோடி அரசு டெல்லியில் விவசாயிகளை வஞ்சிப்பது போல தமிழ்நாட்டில் எடப்பாடி அரசும் விவசாயிகளை வஞ்சிக்கிறது.
அதிமுக பிரமுகர்கள் வாங்கிய விவசாயி கடனை மட்டுமே தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதில் எந்த ஒரு விவசாயியும் பலனடையவில்லை. பிரதமர் மோடி சென்னைக்கு வருவதால் தமிழ்நாட்டில் எவ்வித அரசியல் மாற்றங்களும் நிகழாது. மோடி சென்றவுடன் அமித் ஷாவை வைத்து அரசியலில் குழப்பங்களை ஏற்படுத்தலாம்.
மோடி தமிழ்நாடு மக்களுக்கான எந்த திட்டங்களையும் இதுவரை அறிவித்தது இல்லை. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக உட்கார வைத்தது சசிகலா. ஆனால் நன்றியை மறந்து முதலமைச்சர் தற்போது பேசுவதை அதிமுக தொண்டர்கள் கவனித்து வருகின்றனர். வரும் தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்’ என்றார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை! - பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!