கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
வாராகி என்பவர் தாக்கல்செய்துள்ள அம்மனுவில், ”நேற்று (டிச.01) அறிவிக்கப்பட்டிருந்த பாமக போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியைச் சேர்ந்த பலர் வாகனங்களில் சென்னைக்கு வந்தபோது அவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் திரும்பிச் செல்ல கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து, ரயில் மீது கற்களை வீசி பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர்.
அந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கும், பொது சொத்துக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதால் மேற்கொண்டு போராட்டம் நடத்த தடைவிதிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.