பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரிய அளவில் குறைக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது ஆனாலும் நாடு முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாமல் அரசும் தன்னார்வலர்களும் திணறி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தொடங்கிவிட்டது அதற்கான வழிவகைகளை அப்போதே யோசிக்க ஆரம்பித்த பிள்ளையார்குப்பம் கிராமம் இதற்காக புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை சார்பில் அப்போது இருந்த கிராம கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.
அக்குழு மூலம் அங்குள்ள மக்களுக்கு துணி, காகிதம் ஆகியவற்றைக்கொண்டு பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது பின்னர் கிராமத்தில் உள்ள டீ கடைகள், மளிகை வணிகம் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்க அறிவுறுத்தப்பட்டு மக்கள் ஒத்துழைப்புடன் அவர்கள் உற்பத்தி செய்த பைகளை கடைகளுக்கு வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக இன்றுவரை நிமிர்ந்து நிற்கிறது.
புதுச்சேரி மாநிலத்தின் தென் பகுதியில் உள்ளது இந்த பிள்ளையார்குப்பம் கிராமம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு குப்பைகளாக காட்சியளித்த இப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டு தற்போது இயற்கையோடு பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு சுற்றுச்சூழல் பொறியாளர் சுரேஷ் கூறுகையில்,
'கடந்த 2010 ஆம் ஆண்டு பிள்ளையார்குப்பம் கிராமம் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும், பிரகடனப்படுத்தப்பட்டது இன்றும் டீக்கடைகள், மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மாற்றுப் பொருள்களான காகித பைகள் பயன்படுத்த அறிவுறுத்தி வழங்கப்பட்டது இதற்காக இளைஞர்களுக்கும் மகளிருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது' தற்போது இந்த கிராமம் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கிராமமாக விளங்குவதாக அவர் கூறினார்.
பிள்ளையார் குப்பம் கிராமம் அருகே உள்ள பனித்திட்டு மீனவ கிராமமான இப்பகுதியில் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது பள்ளி மாணவன் சிலம்பரசன் கூறுகையில்,
'கடலோர கிராமம் என்பதால் பிளாஸ்டிக் கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி மாணவர்களாகிய நாங்கள் நான்கு பேர் இணைந்து 100 மாணவர்கள் குழு உருவாக்கி பொதுமக்களிடம் நாளொன்றுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை அதனை வாரம், மாதம் என ஆய்வு செய்து எவ்வளவு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது என்று சர்வே செய்து அதை தடுப்பதற்கான ஆய்வு நடத்தி தேசிய குழந்தைகள் அறிவியல் துறைக்கு அனுப்பி பரிசு பெற உள்ளோம்' என தெரிவித்தனர்.
இப்பகுதி மாநிலத்தின் சிறந்த சுற்றுலா இடமாக தயாராகி வருகிறது பனித்திட்டு கிராமத்திலும் பசும் புல்வெளிகள் அழகிய கடற்கரை கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள் போன்றவை இருப்பதால் தற்போது அதிகமாக சுற்றுலா பயணிகளை ஈர்த்து உள்ளதாகக் கூறப்படுகின்றது இன்று இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்ட கிராமமாக பிள்ளையார்குப்பம் கிராம மிளிர்கிறது என்றால் அது மிகையாகாது.
இதையும் படிக்க: நெகிழி இல்லா குமரி - பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி!