நாமக்கல் மாவட்டம், மின்னாம்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள நைனாமலை பகுதியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், மலை பகுதியில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை விட்டுச் செல்வதால், அப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து வருவதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளாஸ்டிக் தடை உத்தரவு காகித அளவிலேயே இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பரவலாக கிடைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் எளிதில் கிடைப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் வலியுறுத்தினர். சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்டறிய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'