சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 28) சென்னையில் ஆங்கில நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் ஸ்டார் – தென்னக விளையாட்டு மாநாட்டில் ( Sportstar - South Sports conclave ) கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செய்து வருகிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக ஒரு திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
வளர்ச்சி என்பதைத் தொழில் வளர்ச்சியாக மட்டும் சிலர் எடுத்துக்கொள்கிறார்கள். ‘டெவலப்மெண்ட்’ என்பதைத் தாண்டிய விரிவான பொருள், ‘வளர்ச்சி’ என்ற சொல்லுக்கு உண்டு. அந்த வகையில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு விளங்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் முதன்முறையாக: அதில் ஒரு முக்கியமான துறை தான், விளையாட்டுத் துறை. அத்தகைய விளையாட்டுத்துறையிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் தமிழ்நாடு இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, வருகின்ற ஜூலை 28அன்று 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
200 நாடுகள் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதன்முறையாக நம்முடைய சென்னை மாநகரில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடப்பது இது முதல் முறை என்பதையும், தாண்டி பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், அந்த முதல் முறையும் நம்முடைய தமிழ்நாட்டில் நடப்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி.
நானும் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவன்: விளையாடுபவர்களை மட்டுமல்ல, போட்டிகளை பார்ப்பவர்களையும் உற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் அது அமைந்திருக்கிறது. இத்தகைய விளையாட்டுத்துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு முதலில் தேவையானது ஊக்கம்தான். அத்தகைய ஊக்கத்தை அளிப்பதற்காக பல அறிவிப்புகளை நம்முடைய அரசின் சார்பில் நாம் முன்னதாகவே அறிவித்துள்ளோம்.
தமிழ்நாடு உடற்கல்வி இயல் மற்றும் விளையாட்டுப்பல்கலைக்கழகத்தில் இறகுப்பந்து பயிற்சிக்கூடம், மேசைப்பந்து பயிற்சிக்கூடம், தங்கும் விடுதி, ஆய்வகம் ஆகியவை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பக்கலை வீரர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன்தான். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நான் தவற விடமாட்டேன். பள்ளிக்காலம் முதல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கக்கூடியவன். மேயர் ஆனபோதும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு நான் விளையாடி இருக்கிறேன். விளையாட்டுப் போட்டிகள் என்பது,விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமாக - தாராளமாக நிதி உதவிகளை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது, செய்யவும் போகிறது.
பிரமாண்டமான அரங்கம்: தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட நிலையை இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம். குறிப்பாக மதுரையில், அலங்காநல்லூரில் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்டமான அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
வரும் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படயிருக்கிறது. அதேபோல், மாவட்ட அளவில் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத்தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கவும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நம்முடைய அரசு வெளியிட்டிருக்கிறது.
எத்தனையோ கனவுகள் இருக்கிறது: நமது மாநிலத்திலுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தவும், அனைத்து விளையாட்டுக்களையும் மேம்படுத்தவும் இங்கேயே சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும் என்று நான் மனதார நம்புகிறேன். விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் எத்தனையோ கனவுகள் நமது அரசிற்கு இருக்கின்றன.
அவற்றை நனவாக்கும் வகையில் விளையாட்டுத்துறை இன்னும் சிறக்க வழிவகைகளை நாம் காணவேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இம்மாநாட்டில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, சர்வதேச சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கிரிக்கெட் போட்டி பார்க்க தவற மாட்டேன் - ஸ்டாலின்