சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகள், வீடுகளில் மழை நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடியாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் 4ஆவது நாளாக மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறார். மாநகராட்சி அலுவலர்கள், தீயணைப்பு துறையினர் சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னையில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், "கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் திட்ட பணிகள் முறையாக நடைபெறாததே தி.நகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கக் காரணம். கடந்த 10் ஆண்டுகளில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி கோரப்படும்.
சென்னையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மழை ஓய்ந்த பின் சென்னை மாநகரம் மீட்டெடுக்கப்படும். நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம், சுகாதார துறையால் நடத்தப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு!