விடுதலை வேட்கையும், மனித நேயமும் நம் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்தவை. அதனால்தான் பாலஸ்தீன விடுதலைக்கும் நாம் குரல் கொடுக்குறோம், குஜராத்தில் பூகம்பம் என்றாலும் முதல் ஆளாக நிதி அளிக்கிறோம். இந்த கரோனா சூழலில் பணம் படைத்தவர்கள் செய்யும் உதவியைக் காட்டிலும், எளிய மனிதர்களின் உதவி நம்மை நெகிழச் செய்கிறது. கரோனா பேரிடர் காலத்தில் தங்கள் சிறு சேமிப்பையும் நிவாரண நிதிக்காக இவர்கள் மனமுவந்து கொடுக்கின்றனர். தமிழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவரான றாம் சந்தோஷ் தனது ஆராய்ச்சி உதவித் தொகையை கரோனா பொது நிவாரண நிதிக்கு அளித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், குப்பம் நகரில் அமைந்திருக்கும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவராக இருப்பவர் றாம் சந்தோஷ். இவர் தனக்கு கிடைத்த ஆராய்ச்சி உதவித் தொகை ரூ. 33 ஆயிரத்தை முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், மக்களின் பணம் மக்களுக்காக மக்களரசு வழி என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தெளிவும், புரிதலும் உள்ள இவரைப் போன்ற மாணவர்கள்தான் பேரிடர் காலத்தில் நம்பிக்கையின் நாயகர்களாக இருக்கின்றனர்.