தென்னக ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளராக பதவி வகித்த பி. கே. மிஸ்ரா கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து முதன்மை தலைமை பண்டக மேலாளர் கே. சண்முகராஜ் கூடுதல் பொது மேலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இதனிடையே புதிய கூடுதல் பொது மேலாளரை நியமனம் செய்ய, அதற்கு தகுதியான நபரை தேர்வு செய்யும் பணியில் வாரியம் தீவிரமாக ஈடுபட்டுவந்தது.
இதனையடுத்து, தற்போது புதிய கூடுதல் பொது மேலாளராக பணி மூப்பு மற்றும் அனுபவ அடிப்படையில் பொறியாளர் பி.ஜி.மல்லையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி ஐஐடியில் மின்சார பொறியியல் பட்டம் பெற்ற இவர் 1985 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே மின் பொறியாளர் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தவர் பி.ஜி.மல்லையா.
இவர் கடந்த 30 ஆண்டுகளாக தென்னக ரயில்வே, தென் கிழக்கு மத்திய இரயில்வே, தென் மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென் மேற்கு இரயில்வே, பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
குறிப்பாக, 2004 ஆம் ஆண்டில் மதுரையில் பணியாற்றிய முதுநிலை கோட்ட மின் பொறியாளராக பணியாற்றியுள்ளார்.
அதேபோல குண்டக்கல், பிலாஸ்பூர் ஆகிய ரயில்வே கோட்டங்களில் கோட்ட ரயில்வே மேலாளராகவும், தென் மேற்கு ரயில்வேயில் முதன்மை தலைமை மின் பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் நெதர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா, சீனா, ஈரான், சுவிட்சர்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ரயில்வே பணிகளுக்காக சென்று பயிற்சி பெற்றவரென தகவல் வெளியாகியுள்ளது.