தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கணினி முதுகலை ஆசிரியர்கள் 814 பேரை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கேளாறால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2018-2019ஆம் ஆண்டு கணினி பயிற்றுநர் நிலை-1 (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 01.03.2019 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான இணையதள வழித் தேர்வு இன்று ( 23. 6.2019 ) 119 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 7,546 ஆண்களும், 23,287 பெண்கள் என 30,833 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களின் ஹால் டிக்கெட் சோதனைச் செய்யப்பட்ட பின்னர் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், தேர்வு மையத்தில் உள்ள கணினியில் பயோ மெட்ரிக் முறையில் அவர்களின் வருகைப்பதிவு ஆதார் எண் உதவியுடன் கைரேகை மூலம் சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் தேர்வு எழுதுவதற்கான கணினி அளிக்கப்பட்டது. தேர்வர்கள் தங்களுக்கு உரிய இணையதள பதிவின்போது அளித்த லாக்இன் மூலம் தேர்வினை எழுதுத் தொடங்கினர்.
ஆனால், சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கீழ்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வின்போது சிறிது நேரம் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டின் சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டதாகப் புகார்கள் வந்தன.
![சென்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-3-23-pgcomputerteacherexamprobelam-7204807_23062019151207_2306f_1561282927_1002.jpg)
கும்பகோணத்தில் அன்னைப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்ட போது, முதுகலைக் கணினி ஆசிரியர் தேர்வு 191 மையங்களில் இன்று நடைபெற்றது. அதில் ஏற்பட்ட சில தொழில்நுட்பச் சிக்கலால் தேர்வு தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத முடியாத மையங்களில் உள்ளவர்களுக்கு வேறு தேதியில் தேர்வினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.