சென்னை வடபழனி கங்கப்பா நாயுடு தெருவைச் சேர்ந்த தமீம் அன்சாரி, அதே பகுதியில் தங்கும் விடுதி ஒன்றை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 26) வழக்கம்போல் விடுதி இயங்கி வந்தது. அப்போது இரவு 8.45 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென கையில் வைத்திருந்த இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை விடுதிக்குள் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பலத்த சத்தத்துடன் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்ததில் வரவேற்பு அறை மற்றும் அங்குள்ள கண்ணாடி சேதமடைந்தது. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நேரத்தில், அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தமீம் அன்சாரி அளித்த தகவலின் பெயரில், வளசரவாக்கம் காவல் உதவியாளர் மற்றும் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் ஆகியோர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சிசிடிவி காட்சியில், 35 வயது மதிக்கத்தக்க இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, இரண்டு காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து விடுதியின் வரவேற்பு அறையில் தூக்கி வீசுவது பதிவாகியுள்ளது.
இதில் பதிவான முக அடையாளங்களை வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேநேரம் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களிலும் விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பழிக்குப் பழியாக ரவுடி வெட்டி படுகொலை